உறவை புதுப்பித்துக் கொள்ள தயார்: ஐரோப்பாவின் முடிவுக்காக காத்திருக்கும் ரஷ்யா
ஐரோப்பாவுடன் மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஐரோப்பா - ரஷ்யா உறவில் ஏற்பட்ட விரிசல்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கிய பிறகு, ஐரோப்பா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் அதற்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா மீது பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்தன.
இதையடுத்து தூதரகம், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் எரிவாயு விநியோகம் என ரஷ்யா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உறவு பெரும் சிக்கலடைந்தது.

உறவை புதுப்பித்துக் கொள்ள தயார்
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய கூட்டமைப்பு கவுன்சிலின் வெளியுறவுத் துணைக் குழுவின் முதன்மை துணைத் தலைவர் ஆண்டரி டெனிசோவ் தெரிவித்துள்ளார்.
TASS செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தற்போது உள்ள கொள்கைகளை இரு தரப்புகளும் மீண்டும் சரிபார்த்து மறுபரிசீலனை செய்வது இரண்டு தரப்பிற்கும் சரிசமமான நன்மைகளை தரும் என்று ஆண்டரி டெனிசோவ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான உறவை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான எந்தவொரு முன் முயற்சிகளையும் ஐரோப்பிய நாடுகள் இதுவரை எடுக்கவில்லை என்றும் ஆண்டரி டெனிசோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நிலவி வரும் உறவு முடக்கத்திற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்றும், ஐரோப்பாவின் கொள்கைகள் தான் தற்போதைய உறவு முட்டுக்கட்டைக்கு காரணம் என்றும், இந்த முட்டுக்கட்டையில் இருந்து வெளியே வருவது அவர்கள் கையில் தான் உள்ளது என்றும் டெனிசோவ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |