உக்ரைன் போர் நடக்கும் சூழலில் ரஷ்யாவுடன் கைகோர்த்த நாடு! வான்வழியில் நடந்த அதிரடி... பரபரப்பு முழு வீடியோ
உக்ரைனுடன் ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கிய பிறகு முதல்முறையாக அந்நாட்டுடன் இணைந்து சிரியா வான்வழித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையை சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஷ்யா மற்றும் சிரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு, ரஷ்ய விமானப்படை முதல் முறையாக சிரியாவுடன் இணைந்து இந்த வான்வழித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் 'எஸ்.யூ-24 எம்', 'எஸ்.யூ-34 எம்', 'எஸ்.யூ-35 எஸ்' ரக விமானங்களும், சிரியாவின் 'எம்.ஐ.ஜி-23 எம்.எல்' மற்றும் 'எம்.ஐ.ஜி-29' ரக விமானங்களும் இணைந்து போர்க்காலங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மேற்கொண்டதாக சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில், டமாஸ்கஸ் நகரின் தெற்கு பகுதிகளில் சிரியாவின் ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் நாட்டின் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிரியா-ரஷ்யா இடையிலான இந்த கூட்டுப் பயிற்சி குறித்த தகவல் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
போர் விமானங்கள் பயிற்சியில் பங்கேற்றதாகக் கூறிய வீடியோவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது இரு நாட்டு விமானிகளும் சிக்கலான இலக்குகளை சரியாக சமாளித்துள்ளனர்.
அதாவது அனைத்து சிக்கலான மற்றும் நழுவிச் செல்லும் தன்மையுடைய இலக்குகள் கண்காணிக்கப்பட்டு அழிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.