மனித உடலை மொத்தமாக பொசுக்கும் ஆயுதம்: உக்ரைனில் புடின் கோரதாண்டவம்
உக்ரைனில் மிக ஆபத்தான தெர்மோபரிக் ராக்கெட்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தெர்மோபரிக் ஆயுதத்தின் தாக்கம் என்பது மனித நுரையீரலை சிதைத்து பலி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதுடன், அது மனித உடலை மொத்தமாக பொசுக்கும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
மூன்று நாட்களில் உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என்ற திட்டத்துடன் களமிறங்கிய ரஷ்ய துருப்புகளுக்கு, உக்ரைன் துருப்புகளின் பதிலடி ஏமாற்றத்தை அளிக்க, இந்த ஆத்திரத்தில் ரஷ்யா தெர்மோபரிக் ராக்கெட்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திவரும் ராக்கெட்டுகள் அதிக வெப்பத்தை ஏற்படுத்தி வருவதாலையே, இந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெர்மோபரிக் ராக்கெட்டுகளை ஏவ TOS-1A ரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. குறித்த ஆபத்தான ஆயுதத்தை பொதுமக்கள் மீது விளாடிமிர் புடின் பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதம் எனவும் போர்க்குற்றம் எனவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெர்மோபரிக் ராக்கெட்டு தாக்கிய பகுதியில் 300 மீற்றருக்குள் மொத்தமும் பொசுங்கிவிடும் என தெரிவித்துள்ளார் இராணுவ நிபுணர் ஒருவர். இதனாலையே, ரஷ்ய ராக்கெட் வீச்சுக்கு பின்னர் உக்ரைன் நகரங்களில் அதிக சேதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், தலைநகரை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய துருப்புகள் திணறி வருகின்றன.
இருப்பினும் கார்கிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்துள்ளதுடன், கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.