ரஷ்யாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய வரி: வரி விதிப்பு நடைமுறைக்கு வருவது எப்போது?
ரஷ்யா தனது சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு புதிய நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் 1% சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவில் சுற்றுலா வரி
ரஷ்ய வரி குறியீட்டில் கடந்த 2024ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் இந்த புதிய சுற்றுலா வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா வரி நடைமுறையானது, வளர்ந்து வரும் மற்றும் முன்பே வளர்ந்த சுற்றுலா தளங்களின் பல பகுதிகளில் ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
இந்த சுற்றுலா வரி மூலம் கிடைக்கும் வருவாய், சுற்றுலாத் தளவாடங்களை மேம்படுத்துதல், புதிய சுற்றுலாத் தளங்களை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் அல்லது விடுதியில் தங்கும் ஒவ்வொரு சுற்றுலா பயணியும் இந்த வரியை செலுத்த வேண்டும். அவற்றை ஓட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் வசூலித்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.
இந்த வரி விதிப்பு, சுற்றுலாத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.
வரி விதிப்பு எப்போது தொடங்கும்?
இந்த சுற்றுலா வரி 2025 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விகிதம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2027 ஆம் ஆண்டுக்குள் 3% ஆக உயர்த்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |