'உக்ரைன் எல்லையில் இருந்து பின்வாங்குகிறோம்' வீடியோ வெளியிட்ட ரஷ்யா!
கிரிமியாவிலிருந்து டாங்கிகள், ராணுவ உபகரணங்களை வெளியேற்றிவருவதாக ரஷ்யா வீடியோ வெளியிட்டுள்ளது.
கிரிமியாவில் இராணுவ ஒத்திகைகளை முடித்துக்கொண்டதாகவும், உக்ரைனின் எல்லைகளில் இருந்து முதல் துருப்புப் பின்வாங்குவதாகவும், அங்கு குவிக்கப்பட்ட வீரர்கள் தங்கள் தளங்களுக்குத் திரும்பி வருவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
போர் பதற்றம் அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் சுமார் 150,000 ரஷ்ய துருப்புக்கள் நிறுத்தப்பட்டு, தினமும் போர் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
ரஷ்யா உடனடியாக பின்வாங்கவேண்டும், அதைமீறி உக்ரைன் மீது படையெடுத்தால் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடும் எச்சரிக்கை விடுத்தன.
இதனிடையே, நேற்று படைகளை உக்ரைன் எல்லைகளிலிருந்து பின்வாங்குவதாக ரஷ்ய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அதேநேரம் எத்தனை படைகள் திரும்பப் பெறப்பட்டன, எவ்வளவு தூரம் என்று ரஷ்யா கூறவில்லை என அமெரிக்கா தெரிவித்தது.
இந்த நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு, கிரிமியாவிலிருந்து தங்கள் படைகளை பின்வாங்குவதாக அறிவித்துள்ளது.
அந்த வீடியோவில் டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் வரிசையாக ரயிலில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படும் காட்சிகள் இடம்பெற்றன. மேலும் சில துருப்புகளும் தங்கள் நிரந்தர தளங்களுக்குத் திரும்பும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
The Russian Ministry of Defense released a video showing military units being withdrawn from Crimea (crossing the Crimean Bridge) after the completion of military exercises #Ukraine #Russia Via @michaelh992 pic.twitter.com/T0YRYOuIed
— Newsfeed Ukraine ?? (@NewsfeedUkraine) February 16, 2022
"பயற்சிகள் முடிந்த பிறகு துருப்புக்கள் தங்கள் தளங்களுக்குத் திரும்புவார்கள் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். இந்த முறையும் அப்படித்தான்" என்று ரஷ்ய அரசு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.



