கார்கிவ் நகரில் களமிறங்கியுள்ள ரஷ்ய படை! ரஷ்யா-உக்ரைன் தொடர்பிலான சமீபத்திய முக்கிய செய்திகள்
உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கிவில் ரஷ்ய வான்குடை மிதவை படையினர் (Paratroopers) பாராசூட் மூலம் தரையிறங்கி தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.
'கார்கிவில் இன்னும் பீரங்கி குண்டுகள் தாக்காத பகுதிகள் எதுவும் இல்லை' என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ரஷ்யா ஏவுகணை மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், உக்ரைன் பிரதான தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம், கீவின் மேற்கே ஒரு நகரத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் தெற்கே உள்ள பிலா செர்க்வா நகரம் ஆகியவற்றைத் தாக்கியுள்ளது.
ரஷ்யப் படைகள் கெர்சன் (Kherson), மரியுபோல் (Mariupol) ஆகிய கருங்கடல் நகரங்களை தாக்கியுள்ளது.
ரஷ்ய படையெடுப்புக்குப் பின்னர் 677,000-க்கும் அதிகமானோர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இனப்படுகொலை தொடர்பான உக்ரைனின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மார்ச் 7 மற்றும் 8-ஆம் திகதிகளில் பொது விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் ஒரு சுயாதீன தொலைக்காட்சி சேனல் மற்றும் ஒரு தாராளவாத வானொலி நிலையம் முடக்கப்பட்டுள்ளது.
Apple, Harley Davidson உள்ளிட்ட பல் மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவுடனான வணிகத்தை முடக்குவதாகவும் கட்டுப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளன.
ரஷ்யாவில் மூலதனக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், ரூபிள் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. ரஷ்யர்கள் போட்டியிட்டு தங்கள் பணத்தை எடுத்துவருகின்றனர்.
ஜேர்மனி ரஷ்யாவிற்கு சொந்தமான Nord Stream 2 எரிபொருள் பைப்லைனை நிறுத்திய பிறகு அந்நிறுவனம் திவாலாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
உலக வங்கி உக்ரைனுக்கு 3 பில்லியன் டொலர் நிதியுதவி அறிவித்துள்ளது, இதில் 350 மில்லியன் டொலர் உடனடி நிதியுதவியாக வழங்கப்படவுள்ளது.