கொத்துக் கொத்தாக சரணடையும் இராணுவ வீரர்கள்... பலர் தப்பி ஓட்டம்: திகைக்க வைக்கும் உக்ரைன்
உக்ரைன் - ரஷ்ய போர் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கூட்டமாக சரணடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் மனக்குழப்பத்திலும் சோர்வடைந்தும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் எரிபொருளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், வெறிச்சோடிய உக்ரைன் நகரங்களில் உணவுக்காக சில ரஷ்ய ராணுவத்தினர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, போர் களத்தில் இருந்து தப்பிக்க சொந்த நாட்டு வீரர்களையே உக்ரைன் பாதுகாப்புத்துறையினருக்கு காட்டிக்கொடுக்கும் வேலைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
உக்ரைன் மீதான போர் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை ரஷ்ய தரப்பில் 6,000 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, மூன்றே நாளில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற புறப்பட்ட ரஷ்ய ராணுவத்தினர், தற்போது எதிர் தாக்குதலால் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.
பல ரஷ்ய துருப்புகள், உக்ரைனில் தங்களின் பணி என்ன என்பது தொடர்பில் மேலிடத்து தகவலுக்காக காத்திருப்பதாகவும், ஆனால் ஒருபக்கம் உணவு கேட்டு முறையிடுவதுடன், தாக்குதலுக்கு மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புகள் உயர் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளும் தொலைபேசி உரையாடல்களை பிரித்தானிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று பதிவு செய்துள்ளது.
பல ரஷ்ய ராணுவத்தினர் மூன்று நாட்களாக சாப்பிடவில்லை எனவும், மேலிடத்து உத்தரவுகளை மதிக்கவும் மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டும், பல ரஷ்ய இராணுவ வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அந்த தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும், உயர்ரக இராணுவ வாகனங்களில் உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள் தற்போது உணவு தட்டுப்பாட்டால், வாகனங்களை கைவிட்டு, தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.