ரஷ்ய விஞ்ஞானிகளின் புரட்சிகர சாதனை... பயன்பாட்டிற்கு தயாராகும் புற்றுநோய் தடுப்பூசி
பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
முற்றிலும் பாதுகாப்பானது
இந்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் FMBA அமைப்பின் தலைவரான Veronika Skvortsova குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி தற்போது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என்றும் உத்தியோகப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிக்கான பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவே Skvortsova தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்கள் கட்டாய முன் மருத்துவ ஆய்வுகளுக்காக செலவிடப்பட்டதாகவும், இந்த ஆய்வுகள் தடுப்பூசி மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டாலும் கூட, முற்றிலும் பாதுகாப்பானது என்பதை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இது கட்டியின் அளவை 60% முதல் 80% வரை குறைத்து புற்றுநோயின் வளர்ச்சியை மெதுவாக்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, நோயாளிகளின் ஆயுட்காலமும் அதிகரித்தது. தடுப்பூசி காரணமாக உயிர்வாழும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசியின் முதல் பயன்பாடு பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்.
இது தவிர, விஞ்ஞானிகள் மிகவும் ஆபத்தான மூளை புற்றுநோய்க்கான தடுப்பூசிகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தத் திட்டங்கள் முன்னேறிய நிலையில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் இவை பெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் Skvortsova தெரிவித்துள்ளார்.
சாதனையாகவே பார்க்கப்படுகிறது
புற்றுநோய் தடுப்பூசிகள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உதவுகிறது. சில தடுப்பூசிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கின்றன, சில தடுப்புக்காக பயன்படுகின்றன.
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், தற்போது, புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு சில தடுப்பூசிகள் கிடைக்கின்றன. ஆனால் பெருங்குடல் புற்றுநோய்க்கான இந்த ரஷ்ய தடுப்பூசி ஒரு பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
பெருங்குடல் புற்றுநோய் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய்களில் ஒன்றாகும். இந்த தடுப்பூசி உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்று பரவலாகக் கிடைத்தால், அது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |