ரஷ்ய ஜனாதிபதி புடினை இயக்குவது யார்? வெளியான முக்கிய பின்னணி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனக்கென ஒரு சிறிய ஆலோசனை வட்டத்தைச் சார்ந்திருப்பவர் என்பதுடன், அந்த வட்டத்தில் யார் யார் உறுப்பினர்கள் என்பது தொடர்பிலும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கென ஒரு சிறிய வட்டம்
உக்ரைன் மீதான போர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தான், ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கென ஒரு சிறிய வட்டத்தைச் சார்ந்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அந்த வட்டத்தில், வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் என்பவரும் இடம்பெற்றிருந்தார்.
@EPA
ஆனால் கடந்த சனிக்கிழமை அவர் முன்னெடுத்த கிளர்ச்சி காரணமாக அந்த வட்டத்தில் அவர் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், யெவ்கெனி ப்ரிகோஜின் தவிர்த்து தற்போது புடினின் நெருங்கிய வட்டத்தில் யார் யார் என்ற பட்டியல் கசிந்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு அதில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் மற்றும் ராணுவத் தலைவர் வேலரி கெராசிமோவ் ஆகியோர் தான் ரஷ்ய பின்னடைவுக்கு காரணம் என வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் குற்றஞ்சாட்டி வந்துள்ளார்.
உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்படுவதற்கு, இவர்களின் முன்யோசனை அற்ற திட்டமிடல் தான் காரணம் என்கிறார் யெவ்கெனி ப்ரிகோஜின். இரண்டாவது இடத்தில் முப்படைத் தளபதி வேலரி கெராசிமோவ் உள்ளார்.
இவர் தான் உக்ரைன் படையெடுப்புக்கான ராணுவ திட்டமிடலில் முன்னணியில் இருந்தவர். மட்டுமின்றி கடந்த ஜனவரியில் உக்ரைனில் ரஷ்ய படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
மூன்று விசுவாசிகளில் இவரும் ஒருவர்
சிரிக்காத, கரடுமுரடான, சண்டையை விரும்பக்கூடிய நபர் என்று ஜெனரல் கெராசிமோவ் குறித்து ரஷ்ய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் இடம்பெற்றுள்ளார்.
@reuters
1970களில் புடினுடன் பணியாற்றிய மூன்று விசுவாசிகளில் இவரும் ஒருவர். நான்காவது இடத்தில் மத்திய பாதுகாப்பு சேவையின் தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் இடம்பெற்றுள்ளார்.
இவர் துறையில் இருந்து அளிக்கப்படும் தகவல்களை ஜனாதிபதி புடின் அதிகமாக நம்புவதாகக் கூறுகின்றனர். புடினின் நெருங்கிய வட்டத்தில் இடம்பெற்றுள்ள இன்னொருவர் வெளிநாட்டு உளவுத்துறையின் இயக்குநர் செர்கேய் நரிஷ்கின்.
இவர் புடினின் செயல்களுக்கான கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதில் முக்கியமானவர். வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோஃப் ஜனாதிபதி புடினின் நெருங்கிய வட்டத்திலும் கடந்த 19 ஆண்டுகளாக ரஷ்யாவின் மூத்த ராஜதந்திரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இவர்களுடன், கூட்டமைப்பு கவுன்சிலின் தலைவர் வாலென்டினா மாட்வியென்கோ என்ற பெண்மணியும் தேசிய காவல்படையின் தலைவர் விக்டோர் ஸோலோடாவ் என்பவரும் விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |