ரஷ்யாவின் அடுத்த திட்டம் இது தான்... எச்சரிக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
பலவீனமாகும் நேட்டோ மீது போர் தொடுக்கும் திட்டத்தை ரஷ்யா வகுத்துவருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ஒருபோதும் நம்ப முடியாது
நேச நாடுகளுக்கான அமெரிக்க ஆதரவை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் நீர்த்துப்போகச் செய்தால், ரஷ்யா அதை வாய்ப்பாக பயன்படுத்தும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் போதே ஜெலென்ஸ்கி தமது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். மேலும், உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடினை போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்குள் தள்ள ட்ரம்பிற்கு அதிகாரம் இருப்பதையும்,
ஆனால் ரஷ்ய ஜனாதிபதியை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். நேட்டோ மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்பதை உக்ரைன் பலமாக நம்புவதாகவும் ஜெலென்ஸ்கி பதிவு செய்துள்ளார்.
நேட்டோ அமைப்பு பலவீனமாக புடின் காத்திருக்கலாம் என்றும், ஐரோப்பாவில் இருந்து தங்கள் இராணுவத்தை வெளியேற்ற டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்யும் என்றால், அதுவே புடினுக்கு வாய்ப்பாக அமையும் என்றார்.
நாம் நிராகரிக்க முடியாது
ரஷ்யா எப்போதும் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதில் மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது என்றும், ஐரோப்பாவின் 30 அல்லது 50 சதவிகிதத்தை அவர்கள் இலக்கு வைக்கலாம் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் அமெரிக்காவை மொத்தமாக நமிபியிருக்காமல் ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்த இராணுவம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவை அச்சுறுத்தும் பிரச்சனைகளில் அமெரிக்கா தலையிட முடியாது என விலகிச் செல்லக்கூடும் என்ற சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவுக்கான இராணுவம் உருவாகும் காலம் வரும் என்பதை தாம் உண்மையிலேயே நம்புவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க ரஷ்யாவும் அமெரிக்காவும் சவுதி அரேபியாவில் சந்திக்க இருக்கின்றன. ஆனால், உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |