நாளுக்கு 1,532 பேர்கள்... ஒரே மாதத்தில் 45,680 வீரர்களை பலிகொடுத்த ரஷ்யா
கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து, இந்த நவம்பர் மாதத்தில் மட்டுமே ரஷ்யா மிக மோசமான உயிர்ப்பலியை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா சந்தித்ததில்லை
நவம்பர் மாதத்தில் மட்டும் 45,680 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளது. 2022ல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இப்படியான ஒரு பேரிழப்பை ரஷ்யா சந்தித்ததில்லை என்றே பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு உளவுத்துறையின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, ரஷ்யா தினசரி சராசரியாக 1,532 வீரர்களை இழந்தது என்றே குறிப்பிட்டுள்ளது. நவம்பர் 28ம் திகதி வெளியான தகவலில், ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் மேல் வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
போர் தொடங்கியதன் பின்னர் இப்படியாக ஒரு நெருக்கடியை முதல் முறையாக ரஷ்யா எதிர்கொண்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா உறுதியுடன் முன்னேறி வந்தாலும், அதற்கான விலையையும் அளிப்பதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்க்டனை சேர்ந்த அமைப்பு ஒன்று முன்னெடுத்துள்ள ஆய்வில், ரஷ்யா தனது இலையுதிர்கால தாக்குதல்களின் போது சுமார் 125,800 வீரர்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவின் கடும்போக்கு திட்டத்தின் அடிப்படையில், அவர்கள் உக்ரைனில் கைப்பற்றும் ஒவ்வொரு சதுர கிலோமீற்றருக்கும் 50 வீரர்களுக்கு மேல் பலி கொடுப்பதாக அந்த அமெரிக்க அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து முன்னேறுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதங்கள் பற்றாக்குறை, மேற்கத்திய நாடுகளிடம் ஆயுதங்களுக்காக கெஞ்சும் நிலையிலும் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
இருப்பினும் கடந்த சில மாதங்களாக இறப்பு எண்ணிக்கை தொடர்பில் உக்ரைன் தகவலேதும் வெளியிடவில்லை. ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், குர்ஸ்கில் மட்டும் 38,000 வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் குறித்து தொடர்ந்து கண்காணித்துவரும் ஒருவர் தெரிவிக்கையில், 2022 பிப்ரவரி முதல் இதுவரை 70,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 35,000 வீரர்கள் மாயமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைன் இதுவரை 80,000 வீரர்களை இழந்துள்ளது என குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதை கடுமையாக மறுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
அதிக உயிரிழப்புகளை எதிர்கொள்ளும் நிலையில், சில ரஷ்ய பிராந்தியங்களில், உக்ரைனுக்கு எதிராக போரிட முன்வரும் தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை மூன்று மில்லியன் ரூபிள், அதாவது 30,000 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |