எங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எவரையும்.... ஐரோப்பாவிற்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
உக்ரைனுக்கு உதவ, நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்புள்ள முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை ஐரோப்பிய ஒன்றியம் தேடிவருகிறது.
பழி தீர்ப்போம்
இந்த நிலையிலேயே தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பிய பின்னர், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துடனான பரிவர்த்தனைகளைத் தடை செய்தன.
இதனால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 350 பில்லியன் டொலர் வரையிலான ரஷ்யாவிற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த தொகையில் இருந்து உக்ரைன் பாதுகாப்புக்கு என செலவிட ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது நடந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் தலைவர்களையும் ரஷ்யா இந்த நூற்றாண்டின் கடைசி வரையில் தண்டிக்கும் என முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.
திருட்டுக்கு சமம்
மேலும், ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை அனைத்து சாத்தியமான வழிகளிலும், அனைத்து சாத்தியமான சர்வதேச மற்றும் தேசிய நீதிமன்றங்களிலும், நீதிமன்றத்திற்கு வெளியேயும் தொடரும் என்று மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.
தங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது மேற்கத்திய நாடுகளின் திருட்டுக்கு சமம், மேலும் அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பத்திரங்கள் மற்றும் நாணயங்கள் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகக் கொடிய போரில் உக்ரைனின் அழிவுக்கு ரஷ்யா பொறுப்பு என்றும், அதற்கு ரஷ்யா பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடுகள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |