ரஷ்ய, சீன தடுப்பூசிகளையும் அனுமதிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோரிக்கை வைத்த நாடு
ரஷ்யா அல்லது சீனாவால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்டிருப்பின், அவற்றை பயன்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் நிபுணர் ஒரு தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான Alain Fischer என்பவரே, ரஷ்யா மற்றும் சீனாவின் கொரோனா தடுப்பூசியை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை வைத்தவர்.
வெள்ளிக்கிழமை ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், தடுப்பூசிகள் எந்த நாட்டில் உருவாக்கப்படுகிறது என்பது குறித்து எந்தவிதமான தப்பெண்ணங்களும் இருக்கக்கூடாது.
ஒரு தடுப்பூசியை மதிப்பிடுவதில் ஒருவர் பயன்படுத்த வேண்டிய ஒரே அளவுகோல் அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மட்டுமாக இருக்க வேண்டும்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாக கிடைக்கக் கூடியதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
அந்த தடுப்பூசிகள் செயல்திறனும் பாதுகாப்பு மிகுந்ததாக இருந்தால், அவைகளை பயன்படுத்துவதில் என்ன சிக்கல் இருந்துவிடப் போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஹங்கேரி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததை வரவேற்றுள்ள Alain Fischer, தற்போதுள்ள சூழலில் கிடைக்கப்பெறும் அனைத்து தடுப்பூசிகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான முடிவுக்கு வரவேண்டும் என்றார்.
வெள்ளிக்கிழமை சீனாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள ஹங்கேரி, கடந்த வாரம் ரஷ்யாவின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளித்து, ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தவிருக்கும் முதல் நாடாக மாறியுள்ளது.
இதனிடையே, அல்ஜீரியா, பொலிவியா, வெனிசுலா, செர்பியா, அர்ஜென்டினா மற்றும் மிக சமீபத்தில், ஹங்கேரி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ரச்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.