தீப்பற்றியெரியும் ரஷ்ய ஆயுதக்கிடங்கு... உக்ரைன் தாக்கியதாக சந்தேகம்
ரஷ்யாவுக்குச் சொந்தமான ஆயுதக்கிடங்கு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றிய நிலையில், அது உக்ரைன் தாக்குதலின் விளைவாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய்க் கிடங்குகள் உக்ரைனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, உக்ரைன் எல்லைக்கு 40 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Belgorod பகுதி அதிக அளவில் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.
அப்பகுதி ஆளுநரான Vyacheslav Gladkov கூறும்போது, அதிகாலை 3.35 மணியளவில் தான் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு கண் விழித்ததாகவும், அதற்குப் பின்னும் தான் மூன்று முறை வெடிச்சத்தத்தைக் கேட்டதாகவும், Staraya Nelidovka என்ற கிராமத்தின் அருகிலுள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றில் தீப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் Voronezh என்ற இடத்தில் வாழும் மக்களும் உக்ரைன் எல்லைக்கருகில் இரண்டு குண்டுகள் வெடித்ததாக தெரிவித்துள்ள நிலையில், Kursk என்ற நகரிலும் வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் குறித்து உக்ரைன் எந்த கருத்தும் தெரிவிக்காவிட்டாலும், ரஷ்யா மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே மாதிரியான தாக்குதல்களைப் பார்க்கும்போது, அது உக்ரைன் நடத்தும் தாக்குதல்களாகத்தான் இருக்க முடியும் என கருதப்படுகிறது.
[TJZ6A9 ]