ரஷ்ய எரிவாயு நிறுத்தம்... ஐரோப்பிய நாடொன்றில் மூடப்படும் தொழிற்சாலைகள்
உக்ரைன் ஊடாக ரஷ்ய எரிவாயு விநியோகம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடொன்றில் தொழிற்சாலைகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கணிக்க முடியாத சூழல்
ஐரோப்பிய நாடான மால்டோவாவின் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் அமைந்துள்ள உணவு உற்பத்தியாளர்களைத் தவிர அனைத்து தொழில்துறை நிறுவனங்களையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய மொழி பேசும் சுமார் 450,000 மக்கள் வசிக்கும் பிராந்தியம் இது. உக்ரைன் வழியாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் புதன்கிழமை நிறுத்தப்பட்டதில் இருந்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
உணவு தொழிற்சாலைகளுக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலை எதுவரை தொடரும் என்பதும் கணிக்க முடியாத சூழல் இருப்பதாகவே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏறக்குறைய மூன்று வருடங்களாக யுத்தம் நீடித்து வந்தபோதிலும், ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு உக்ரைன் அனுமதித்தது. இதனால் ஆண்டுக்கு 1 பில்லியன் டொலர், இந்திய மதிப்பில் ரூ 8573 கோடி போக்குவரத்துக் கட்டணமாக உக்ரைன் வசூலித்தும் வந்துள்ளது.
ஆனால் புதனன்று காலாவதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க உக்ரைன் மறுத்துவிட்டது. இந்த நிலையில் ஸ்லோவாக்கியா மற்றும் ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய எரிவாயு வாங்குபவர்கள் மாற்று வழிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகிவிட்டனர்.
ஆனால் ரஷ்யாவுடன் எரிவாயு ஒப்பந்தம் இருந்தும், 1,500 ரஷ்ய இராணுவத்தினர் முகாமிட்டிருந்தும் Transdniestria மொத்தமாக முடங்கிப்போயுள்ளது. இதனிடையே, வீடுகளுக்கு வெப்பமூட்டுவதும் வெந்நீர் விநியோகத்தையும் உள்ளூர் எரிசக்தி நிறுவனம் புதன்கிழமை முதல் குறைத்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில்
தற்போதுள்ள சூழலில் சேமிப்பில் இருக்கும் எரிவாயு அடுத்த 10 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றே ரஷ்ய ஆதரவு Transdniestria பிராந்தியத்தின் பிரதமர் Vadim Krasnoselsky தெரிவித்துள்ளார்.
மால்டோவா முழுவதற்கும் மின்சாரம் வழங்கிய மின் உற்பத்தி நிலையம் உட்பட Transdniestria பிராந்தியத்திற்கு ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் கன மீற்றர் எரிவாயுவை ரஷ்யா விநியோகம் செய்து வந்தது.
2.5 மில்லியன் மக்கள் வசிக்கும் மால்டோவா நாடானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகிறது. ரஷ்யாவுடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், முன்னாள் சோவியத் நாடான மால்டோவா குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்காக எரிசக்தி நுகர்வை குறைக்க முயற்சித்து வருகிறது.
மட்டுமின்றி அண்டை நாடான ருமேனியாவிலிருந்து அதன் தேவைகளில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.
இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோகம் முடிவுக்கு வந்துள்ளதை அந்த நாட்டின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று என விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஐரோப்பாவிற்கு அதிக எரிவாயுவை வழங்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |