புடினுக்கு மிகப்பெரிய பின்னடைவு... உயிருக்கு போராடும் முதன்மையான ரஷ்ய தளபதி
மாஸ்கோவில் மர்ம நபரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ உளவுத்துறை ஜெனரல் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதுகில் சுட்டுவிட்டு
லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ், அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபரால் பலமுறை சுடப்பட்டார். அந்த நபர் அவரை முதுகில் சுட்டுவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவே கூறப்படுகிறது.

பகல் 7 மணிக்கு நடந்த துப்பாக்கிச்சூடு, வொலோகோலாம்ஸ்க் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் வரவேற்பறையில், அவரது வீட்டிற்கு அருகிலேயே நடந்தது.
நேரில் பார்த்தவர் தெரிவிக்கையில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டத்துடன், ஒருவர் உதவிக்கு கூச்சலிடும் சத்தம் கேட்டு அங்கே சென்றதாகவும், அப்போது ரத்த வெள்ளத்தில் அவரைப் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவயிடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
தளபதி அலெக்ஸீவ், GRU இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். GRU அமைப்பின் தலைவர் அட்மிரல் இகோர் கோஸ்டியுகோவ் இந்த வாரம் அபுதாபியில் உக்ரைனுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.

அதிகாரப் போராட்டம்
2018 ஆம் ஆண்டு சாலிஸ்பரி இரசாயனத் தாக்குதல் சம்பவத்தில் அலெக்ஸீவ் மூளையாக செயல்பட்டவர் என்றே கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனிய உளவுத்துறை ஈடுபட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியான நிலையில், ரஷ்யாவில் தற்போது நடக்கும் உள் அதிகாரப் போராட்டங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

ரஷ்ய போரில் உக்ரைனுக்கு எதிரான எண்ணற்ற நடவடிக்கைகளில் GRU ஈடுபட்டுள்ளது. இதனாலையே, தளபதி அலெக்ஸீவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது.
மட்டுமின்றி, புடினின் மிக நெருக்கமான இராணுவ அதிகாரிகளில் இவரும் ஒருவர். மேலும், வாக்னர் கூலிப்படையின் நிறுவனர்களில் தளபதி அலெக்ஸீவும் ஒருவர். அத்துடன் சமீபத்தில் கலைக்கப்பட்ட எஸ்பானியோலா படைப்பிரிவின் நிறுவனரும் இவரே.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |