ரகசியமாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ரஷ்ய அதிபர்! எந்த தடுப்பூசியை பெற்றார்?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்கிழமை தனது முதல் கொரோனா தடுப்பூசி டோஸை பெற்றுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் Dmitry Peskov வெளியிட்டார். ஆனால், புதின் எந்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.
மேலும், அவர் மற்ற நாட்டு தலைவர்களை போல மக்கள் பார்க்கும்படி நேரலையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் பெற்றுள்ளார். Dmitry Peskov கூறுகையில், புதின் தடுப்பூசியை பெற்றபிறகு நலமாக இருப்பதாகவும், புதன்கிழமை முதல் அவர் முழு நாள் வேளையில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்தார்.
ரஷ்யாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள Sputnik V, EpiVacCorona மற்றும் CoviVac ஆகிய மூன்று தடுப்பு மருந்துகளுக்கு ரஷ்ய அதிகாரிகள் ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதில் எந்த தடுப்பூசியை ஜனாதிபதி புதின் பெற்றுக்கொண்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மூன்று தடுப்பூசிகளும் மிகவும் பலனளிக்கக்கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் 146 மில்லியன் மக்கள்தொகையில் 6.3 மில்லியன் மக்கள் (4.3% பேர்) மட்டுமே குறைந்தபட்சம் முதல் டோஸை பெற்றுள்ளனர். தடுப்பூசி விகிதத்தைப் பொறுத்தவரை ரஷ்யா பல நாடுகளை விட பின்தங்கியிருக்கிறது.