பற்றியெரிந்த ஹீத்ரோ... ஐரோப்பா முழுக்க ரஷ்யாவின் சதி வேலைகளின் பகீர் பின்னணி
ஐரோப்பா முழுவதும் புடின் தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். தற்போது லண்டன் ஹீத்ரோ விவகாரமும் புடினின் சதியாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
ஐரோப்பா கண்டத்தை
தீ வைப்பு, குண்டுவெடிப்பு சதி, வான் வழி பயங்கரவாதம், சைபர் தாக்குதல்கள் மற்றும் படுகொலைத் திட்டங்களால் விளாடிமிர் புடின் ஐரோப்பா கண்டத்தை புரட்டிப் போட்டுள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள உக்ரைனுக்குச் சொந்தமான கிடங்கு ஒன்று 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென்று தீப்பிடித்தது. குறித்த சம்பவத்தில் பிரித்தானியர் ஒருவர் சிக்கியதுடன், ரஷ்யாவின் வாக்னர் படைகளால் முன்னெடுக்கப்பட்ட சதி அதுவென நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது.
அதே ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியா திரும்பிய விமானம் ஒன்றில் கடித வெடிகுண்டு ஒன்று அனுப்பப்பட்டது. பர்மிங்காமில் உள்ள DHL கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சதி அது.
ஜேர்மனியில் உள்ள Leipzig நகரில் தொடர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் ரஷ்யா என்பது அம்பலமானது. கடித வெடிகுண்டு தொடர்பில் போலந்து பொலிசார் நால்வரை கைது செய்தனர். அமெரிக்காவுக்கு கடித வெடிகுண்டு அனுப்பும் சதி திட்டம் அதில் வெளிச்சத்திற்கு வந்தது.
நவம்பர் 2024 ல் லிதுவேனியா மீது பறந்துகொண்டிருந்த ஒரு DHL சரக்கு விமானம் விழுந்து தீப்பந்தமாக வெடித்தது. லிதுவேனியா ஜனாதிபதி தெரிவிக்கையில், இனி எந்த விமான விபத்து என்றாலும், அதன் பின்னணியில் ரஷ்யாவின் பங்கினை முதலில் விசாரிக்க வேண்டும் என்றார்.
போலந்தின் பிரதமர் டொனால்டு டஸ்க் தெரிவிக்கையில், ரஷ்யா விதைக்கும் இந்த ஆகாய பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது போலந்துக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்களுக்கு எதிராகவே என்றார்.
ஜெலென்ஸ்கியை கொல்ல
கடந்த ஆண்டு பிப்ரவரியில் லாத்வியாவில் நடந்த பயங்கர தீ விபத்தில் ரஷ்யாவின் பங்கு அம்பலமானது. மட்டுமின்றி, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பா கண்டம் முழுவதும் பல முறியடிக்கப்பட்ட படுகொலை முயற்சிகளும் நடந்துள்ளன.
ஜூலை 2024ல் ஜேர்மன் ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைவரான Armin Papperger என்பவரைக் கொல்லும் திட்டம் அமெரிக்க உளவுத்துறையால் முறியடிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் போலந்துக்கு விஜயம் செய்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா திட்டமிட்டிருந்ததும் உளவு அமைப்புகளால் அம்பலமானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரான்சின் D-Day 80வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களில் குண்டு வீசும் சதித்திட்டம் அதிர்ஷ்டவசமாக முறியடிக்கப்பட்டது.
மேலும் ஐரோப்பிய கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள பல முக்கிய இணைய கேபிள்கள் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டுள்ளன. 2024 மே மாதம் 3ம் திகதி ஜேர்மனி மற்றும் செக் குடியரசு அரசாங்கங்கள் இரண்டும் ஒரே நாளில் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
தற்போது லண்டன் ஹீத்ரோ விவகாரமும் ரஷ்யாவின் சதி வேலையாக இருக்கலாம் என்ற அச்சத்தை நிபுணர்கள் பலர் முன்வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |