அணு உலைகளுடன் வட கொரியாவுக்குப் பயணப்பட்ட ரஷ்ய கப்பல்... கடலில் மூழ்கிய மர்மம்
ரஷ்ய சரக்கு கப்பல் ஒன்று மர்மமான முறையில் தாக்குதலுக்கு இலக்காகி, ஸ்பெயினின் தென்கிழக்குக் கடற்பகுதியில் மூழ்கியுள்ள சம்பவத்தில் அதிரவைக்கும் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரஷ்யப் போர்க்கப்பல்
குறித்த ரஷ்ய கப்பலானது வட கொரியாவிற்கு நீர்மூழ்கிக்கான அணு உலைகளுடன் புறப்பட்டிருக்கலாம் என்றும், மேற்கத்திய நாடுகளின் கடற்படையால் ரகசியத் தாக்குதலுக்கு இலக்காகி, மூழ்கியிருக்கலாம் என்றும் தற்போது, நீண்ட 17 மாதங்களுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது.

Ursa Major என்ற அந்த 142 மீற்றர் நீளம் கொண்ட கப்பலானது ரஷ்ய அரசாங்கத்திற்கு தொடர்புடைய Oboronlogistics நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
கடந்த டிசம்பர் 23, 2024 ல் நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக, மர்சியா கடற்கரையிலிருந்து 62 கடல் மைல் தொலைவில் தொடர்புடைய சரக்கு கப்பல் மூழ்கிய நிலையில், அது ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளாடிவோஸ்டாக்கிற்கு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்பெயின் நேரப்படி இரவு 12.53 மணிக்கு உதவி கேட்டு ஆபத்து அழைப்பை விடுத்தது. இதனையடுத்து ஸ்பெயினின் கடல்சார் மீட்பு மற்றும் பாதுகாப்பு சேவையான சசேமார், உர்சா மேஜர் கப்பலுக்கு ஒரு ஹெலிகொப்டர், ஒரு அதிவேக மீட்புப் படகு மற்றும் ஒரு இழுவைப் படகு ஆகியவற்றை அனுப்பியிருந்தது.
உர்சா மேஜர் கப்பலின் ஊழியர்கள் மீட்கப்பட்ட நிலையில், கப்பலின் இயந்திர அறையில் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக மீட்புக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
இதனிடையே, திடீரென்று ஒரு ரஷ்யப் போர்க்கப்பல் வந்து, நடவடிக்கைகளைப் பொறுப்பேற்று, இரண்டு சசேமார் படகுகளையும் இரண்டு கடல் மைல் தொலைவிற்குப் பின்வாங்குமாறு உத்தரவிட்டது.
இதனையடுத்து அந்த ரஷ்யப் போர்க்கப்பல் உர்சா மேஜருக்கு மேலே ஒளிரும் தீப்பந்தங்களை ஏவியது. இது நடக்கும் சம்பவத்தைக் கண்காணித்து வந்த உளவு செயற்கைக்கோள்களின் அகச்சிவப்பு அலைவரிசைகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.

இரவு 11.20 மணியளவில், உர்சா மேஜர் கப்பல் கடலுக்குள் மூழ்கியதுடன், தற்போது 2,500 மீற்றர் ஆழத்தில் உள்ளது. முதற்கட்ட வெடிப்புகளில் இரண்டு ஊழியர்கள் மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், 14 பேர் மீட்கப்பட்டனர்.
அதிவேக ஆயுதம் ஒன்றால்
அந்தக் கப்பல் உத்தியோகப்பூர்வமாக, 129 சரக்குக் கொள்கலன்கள், இரண்டு கிரேன்கள் மற்றும் இரண்டு பெரிய பாதாளச் சாக்கடை மூடிகள் உள்ளிட்ட ஆபத்தற்ற சரக்குகளை ஏற்றிச் சென்றதாக கூறப்பட்டபோதிலும், அது சென்ற பாதையும் மூழ்கிய சம்பவமும் ஸ்பானிய அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதனைய்டுத்து நடந்த விசாரணையில், கப்பலில், நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் அணு உலை பாகங்களைப் போன்ற பாகங்கள் இருந்ததாக அதன் மாலுமி ஒப்புக்கொண்டார்.

மட்டுமின்றி, இரண்டு பிரம்மாண்டமான நீல நிறக் கொள்கலன்களையும் விசாரணை அதிகாரிகள் கவனித்திருந்தனர் — ஒவ்வொன்றும் சுமார் 65 டன்கள் எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டது.
மேலும், கப்பலின் வெளிப்புறப் பகுதியில் கண்டறியப்பட்ட, சேதமடைந்த உலோகம் உட்புறமாக வளைந்த நிலையில் இருந்த, 50 செ.மீ.க்கு 50 செ.மீ. அளவிலான துளையானது, supercavitating torpedo எனப்படும் அதிவேக ஆயுதம் ஒன்றால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றே விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்கா, சில நேட்டோ நாடுகள், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மட்டுமே இத்தகைய அதிவேக டார்பிடோவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
விசாரணையின் முடிவில், திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவே உர்சா மேஜர் கப்பலைத் தாக்கி மூழ்கடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |