முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும் ரஷ்ய ராணுவம்: வேகவேகமாக வெளியேறும் மக்கள்
உக்ரைன் ரஷ்யப்போரின் தீவிரம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. ஒரு பக்கம், உக்ரைன் படைகள் ரஷ்யப் பகுதிகளுக்குள் முன்னேறி வருகின்றன.
ஆனாலும், ரஷ்யாவும் உக்ரைன் நகரமொன்றை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும் ரஷ்ய ராணுவம்
உக்ரைன் நகரமான Pokrovskஐ நோக்கி ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறிவருகின்றன.
ஆகவே, வேகவேகமாக அந்நகர மக்கள் நகரைவிட்டு வெளியேறிவருகிறார்கள். ஒரு கையில் பிள்ளைகளைக் கையில் பிடித்துக்கொண்டு, மறுகையில் தங்கள் உடைமைகளைப் பிடித்துக்கொண்டு, மக்கள் Pokrovsk நகரை விட்டு வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேறி வருவதால், சுமார் 53,000 பேர் வாழும் Pokrovsk நகர மக்களை உடனடியாக நகரைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சிறியோர் முதல் பெரியோர் வரை, அனைத்து வயதினரும், ரயில்கள் மூலமாகவும், பேரூந்துகள் மூலமாகவும் தங்களால் சுமக்க முயன்ற அளவுக்கு தங்கள் உடைமைகளை தூக்கிக்கொண்டு வெளியேறி வருகிறார்கள்.
அவர்களில் சிலர் கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளையும் காணமுடிகிறது. உக்ரைன் ராணுவ வீரர்கள் முதியோருக்கு உதவ, தன்னார்வலர்கள் உடற்குறைபாடுகள் கொண்டோருக்கு உதவ, ரயில்வே ஊழியர்கள் குண்டு துளைக்காத உடைகளுடன் நடமாடிவருகிறார்கள்.
Donetsk பகுதியிலுள்ள Pokrovsk நகரம், பாதுகாப்பு தொடர்பிலும், உக்ரைனுடைய ராணுவ தளவாடங்கள் போக்குவரத்திலும் முக்கிய இடம் வகிக்கும் நகரமாகும். அந்நகரம் ரஷ்யாவிடம் பிடிபடுமானால், உக்ரைனுடைய ராணுவ தளவாட போக்குவரத்து முதல் பல விடயங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
அத்துடன், Donetsk பகுதி முழுவதையும் கைப்பற்றவேண்டும் என்ற ரஷ்யாவின் இலக்கையும் அந்நாடு நெருங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |