ஹிஸ்புல்லா படைகளிடம் ரஷ்ய ஆயுதங்கள்... இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு
லெபனானில் ஹிஸ்புல்லா படைகளின் முகாம்களை சோதனையிட்ட போது ரஷ்ய ஆயுதங்கள் சிக்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நவீன ரஷ்ய ஆயுதங்கள்
பிரெஞ்சு செய்தித்தாளான Le Figaro பத்திரிகையாளரிடம் குறிப்பிட்ட நெதன்யாகு, 2006 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ், லெபனான் இராணுவம் மட்டுமே நாட்டின் தெற்கே ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் இப்பகுதியில் ஹிஸ்புல்லா படைகள் நூற்றுக்கணக்கான சுரங்கம் தோண்டியுள்ளதுடன், அதில் நவீன ரஷ்ய ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் கண்டெடுத்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் அதிகாரிகள் வெளியிட்டதாக குறிப்பிட்டு Washington Post நாளேடு வெளியிட்ட செய்தியில், லெபனானுக்குள் இஸ்ரேல் நடத்திய சோதனையில் ரஷ்ய மற்றும் சீன டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ரஷ்ய ஆயுதங்கள் தொடர்பில் நெதன்யாகு வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஹிஸ்புல்லா மீது தாக்குதல் முன்னெடுப்பதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
எங்களின் ஒரே நோக்கம்
இதனால், அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ள 60,000 மக்கள் தங்கள் சொந்த குடியிருப்புகளுக்கு திரும்புவார்கல் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா படைகளுக்கு இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்து வந்துள்ளது.
இதனாலையே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. லெபனானில் ஒரு உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தங்களின் நோக்கமல்ல என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, லெபனானின் உள் விவகாரங்களில் இஸ்ரேல் தலையிடுவதும் முறையல்ல என்றார்.
மேலும், லெபனான் எல்லையில் வாழும் இஸ்ரேல் குடிமக்கள் தங்கள் குடியிருப்புக்குச் சென்று பாதுகாப்பாக வாழ அனுமதிப்பது மட்டுமே எங்களின் ஒரே நோக்கம் என்றார்.
ஹிஸ்புல்லா படைகளை ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட லெபனான் மக்களின் எண்ணிக்கை 1,373 என்றே கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |