உக்ரைன் தான் காரணம்! கார் குண்டுவெடிப்பில் சிக்கிய தேசிய எழுத்தாளர்..ரஷ்யா பரபரப்பு அறிக்கை
ரஷ்ய தேசியவாத எழுத்தாளர் கார் குண்டுவெடிப்பில் காயமடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உக்ரைன் சார்பாக செயல்பட்டதாக ரஷ்யா பரபரப்பாக தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்
ட்ரோன்கள் மூலம் கிரெம்ளினை உக்ரைன் தாக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என உக்ரைன் மறுத்தது.
இந்த நிலையில், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Nizhny Novgorod பகுதியில், ரஷ்யாவின் தேசியவாத எழுத்தாளரான ஜாகர் பிரிலெபினின் கார் குண்டுவெடிப்பில் சிக்கியது.
அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர்தப்பினார். ஆனால் காரின் சாரதி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த எழுத்தாளர் ஜாகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, விசாரணைக் குழு குண்டுவெடிப்பில் கவிழ்ந்த காரின் படங்களை வெளியிட்டது.
உக்ரைன் மீது குற்றச்சாட்டு
கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உக்ரைன் சார்பாக செயல்படுவதை ஒப்புக் கொண்டதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளனர்.
இதனால் எழுத்தாளர் மீதான தாக்குதலுக்கு உக்ரைனும், அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகளும் ஆதரவளிப்பதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், அலெக்சாண்டர் பெர்மியாகோவ் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக விசாரணைக்குழு பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
Image: REUTERS/Anastasia Makarycheva