தமிழ்நாட்டில் பாஜக பூச்சியம் வர காரணம் அண்ணாமலை தான்! சரிசெய்தால் திருந்த வாய்ப்பு - எஸ்.வி.சேகர் காட்டம்
பாஜக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாததற்கு அண்ணாமலை தான் காரணம் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர்
மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட வெற்றி பெறாதது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர் சந்திப்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், ''அண்ணாமலை கஷ்டம் அவரால் வந்தது. தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூச்சியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அதில் 13 இடங்களில் டெபாசிட் வேற போய்டுச்சு. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தான். இந்த தேர்தல் குறித்து 6 மாதங்கள் முன்பே நான் கூறினேன்.
கலைஞரை நூற்றாண்டு விழா முடிந்து, அந்த கொண்டாட்டத்தில் அவரது 101வது பிறந்தநாள் பாரிய அளவில் திமுக கொண்டாடக் கூடிய அளவில் தான் இருக்கும் என்று கூறினேன். அதுபோல் தான் இந்த முடிவு வந்திருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் அடிப்படையான கூட்டணி என்ற விடயம் தான். கூட்டணியை கலையாமல் ஸ்டாலின் அவர்கள் பார்த்துக் கொண்டார். மற்றும் அரசின் சாதனைகள் மூலம் முழு வெற்றி பெற்றார்கள்'' என்றார்.
அண்ணாமலை தலைமையில் பூச்சியம்
மேலும் அவர், ''அதேபோல் நான் முன்பே கூறினேன் தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூச்சியம் தான் என்று, அது நிரூபணமாகியுள்ளது. அதே சமயத்தில் மோடி அவர்கள் 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்றேன். அதுவும் நடந்திருக்கிறது.
அண்ணாமலையின் யோசனையால் அதிமுகவின் கூட்டணியை தமிழக பாஜக என்றைக்கு முறித்துக் கொண்டதோ, அப்போவே அதன் எதிர்காலம் தெரிந்துவிட்டது.
தோல்வியை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இதை சரி செய்தால் தான் திருந்த வாய்ப்பு உள்ளது. எனக்கும் அண்ணாமலைக்கும் ஒரு சண்டையும் இல்லை. நான் 10 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் சேர்ந்தபோது, மோடியிடம் எந்த தேர்தலிலும் நிற்க மாட்டேன் என்று கூறினேன்.
அப்படி இருக்கும்போது என்னால் என்ன பாதிப்பு இருக்கப் போகிறது கட்சிக்கு? என்னை பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்றிருந்தால் 10, 15 சதவீதம் வாக்குகள் அதிகம் கிடைத்திருக்குமே'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |