இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் கேரள நபர் பலி! கதறும் 7 மாத கர்ப்பிணி மனைவி
வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார்.
இஸ்ரேல் மீது தாக்குதல்
லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியொட் மீது தாக்கியது.
இதில் மூன்று இந்தியர்கள் படுகாயமடைந்ததில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாட் நிபின் மேக்ஸ்வெல் (31) என தெரிய வந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பாட் நிபின் இஸ்ரேலுக்கு வந்து பண்ணை ஒன்றில் வேலை செய்துள்ளார். திருமணமான அவருக்கு மனைவி மற்றும் 5 வயது மகள் உள்ளனர்.
இதற்கிடையில் காயமடைந்த இருவர் புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
7 மாத கர்ப்பிணி மனைவி
பாட் நிபின் மேக்ஸ்வெலின் தந்தை மகனின் இறப்பு குறித்து கூறுகையில், 'எனது மருமகளிடம் இருந்து மாலை 4.30 மணியளவில் எனக்கு அழைப்பு வந்தது, எனது மகன் விபத்தில் சிக்கியதாக அவர் தெரிவித்தார். பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் என் மகன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனக்கு மூன்று பிள்ளைகள். அதில் இருவர் இஸ்ரேலிலும், ஒருவர் அபுதாபியில் பணிபுரிகின்றனர். பாட் நிபினுக்கு ஒரு மகள் உள்ளார். அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்' என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் பாட் நிபினின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |