பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை?
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தி தாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி நியூயார்க்கில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது கொடூரமான கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்தியாவில் பிறந்து பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்ற ருஷ்டிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சௌடவுகுவா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், ஹாடி மாத்தர் என்ற நபர் மேடையில் ஏறி சல்மான் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இந்த தாக்குதலில் ருஷ்டிக்கு தலை, கழுத்து, இடது கை, கல்லீரல் மற்றும் குடல் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தாலும், வலது கண் பார்வையை நிரந்தரமாக இழந்ததுடன், ஒரு கையின் செயல்பாடும் பாதிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை
தாக்குதல் நடத்திய ஹாடி மாத்தர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, 1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்ற நாவலுக்கு இஸ்லாமிய மதகுருமார்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது.
இதன் காரணமாக அவர் பல ஆண்டுகளாக கொலை மிரட்டல்களை சந்தித்து வந்தார். இந்த தொடர்ச்சியான எதிர்ப்பின் விளைவாகவே இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, நியூயார்க் நீதிமன்றம் குற்றவாளி ஹாடி மாதருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |