இந்தியில் பிரச்சாரம் செய்த சரத்குமார் மற்றும் அண்ணாமலை! மும்பையில் சுவாரஸ்யம்
மும்பையில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் சரத்குமார் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தி மொழியில் பிரச்சாரம் செய்தனர்.
மும்பை பிரச்சாரம்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையில் பாஜக கூட்டணியில் சிவசேனாவும் (ஏக்நாத் ஷிண்டே), பாஜகவும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இதில் தென்மத்திய மும்பை தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) சார்பாக ராகுல் ஷெவாலேவும், மற்றொரு சிவசேனா (உத்தவ்) சார்பாக அனில் தேசாய் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
இதில், அனில் தேசாய்க்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு தாராவியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், நேற்று ராகுல் ஷெவாலவுக்கு ஆதரவாக சரத்குமாரும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதன்படி, நேற்று மாலை தாராவியில் சரத்குமார் ரோடுஷோ நடத்தினார். அதன்பின்னர், மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் சரத்குமாரும், அண்ணாமலையும் கலந்து கொண்டனர்.
அப்போது, நடிகர் சரத்குமார் தமிழில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது அவர் இந்தி மொழியில் பேசினார். அவர், மோடியின் தலைமை நாட்டுக்கு தேவை என்றும், அவரின் சாதனைகள் குறித்தும் பேசினார்.
அடுத்து பேசிய அண்ணாமலை தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் பேசினார். அவர், மோடியின் ஆட்சியில் இலவச வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்வார் என்றும் பேசினார்.
அவர்கள் பேசிய பகுதி தமிழர்கள் குறைவாக வசிப்பதால் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |