மது ஒழிப்பு மாநாடு.., திருமாவளவனை கடுமையாக விமர்சித்த சரத்குமார்
தமிழகத்தில் அமல்படுத்துவதை விட்டுவிட்டு மது விலக்கு கோரி மத்திய அரசை குற்றம் சுமத்துவது சரியா என்று திருமாவளவனுக்கு நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
காந்தி ஜெயந்தி நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுவிலக்கை அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய திருமாவளவன், "இந்தியா முழுவதும் 7 முதல் 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படுகிறது. திமுகவிற்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் உடன்பாடு இருந்தாலும் நடைமுறையில் சிக்கல் உள்ளது" என்றார்.
சரத்குமார் கண்டனம்
இந்நிலையில் மதுவிலக்கு தொடர்பான விசிகவின் தீர்மானங்களை விமர்சித்து பாஜக பிரமுகரான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்களில், மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள மது விலக்கை, தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம், முரண்பாட்டுடன் வேடிக்கையாக உள்ளது.
குடியுரிமை சட்டம், தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாக விவாதம் செய்பவர்கள், மாநில உரிமைகளுக்குள் இருக்கும் மது விலக்கை நேரடியாக அமல்படுத்தாமல், மத்திய அரசு தேசிய கொள்கையாக்கி அமல்படுத்திட வேண்டும் என பொறுமையாக காத்திருப்பது நகைப்புக்குரியது.
மது விலக்கு அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசே வரி இழப்பு தரவேண்டும் என்று மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் வகையில் கூட்டணி கட்சியின் ஆட்சிக்காக மாநாட்டில் பேசியிருப்பது முற்றிலும் மக்கள் நலனுக்கு எதிரானது.
மத்திய அரசு மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுமத்தி, தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்பவர்களை மக்கள் அடையாளம் காணவேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |