கள்ளக்குறிச்சி மாணவி நீதிக்காக போராடியவர்களை விடுதலை செய்யுங்கள்: நடிகர் சரத்குமார்
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி கைதானவர்களை, எதிர்கால நலன்கருதி விடுதலை செய்ய வேண்டும் என நடிகரும், சமக கட்சி தலைவருமான சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது.
பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டதுடன் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானவர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பில் கைதானவர்களை எதிர்கால நலன் கருதி, எச்சரித்து விடுவிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் நீதி கேட்டு பள்ளி வளாகத்தில் போராடினர்.
அதில், கடந்த 17-ந்தேதி விரும்பத்தகாத நிகழ்வாக வன்முறை வெடித்தது துரதிர்ஷ்டவசமானது. வன்முறை எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. நமது காந்திய தேசத்தில் அறவழியில் அயராது போராடினால் நிச்சயம் நீதி நிலைக்கப்பெறும்.
அரசை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களின் உரிமைக்காக போராடுவதற்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தை, முறையின்றி பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களையும், வன்முறைக்கு தூண்டியவர்களையும் கண்டறிந்து தண்டிப்பது நியாயம் தான்.
PC: PTI
அதேசமயம் மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கப்பெற களத்தில் போராடிய மாணவர்களும், இளைஞர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வருகிற செய்தி வேதனையளிக்கிறது. போராட்ட சமயத்தில் காவல்துறையினர் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.
எனவே, இருபுறமும் நடந்தேறியவற்றை கவனத்தில் கொண்டு தமிழக அரசு, மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.