ஈரான் உடனடி தாக்குதல் நடத்த திட்டம்: உயர் எச்சரிக்கையில் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர்
ஈரான் உடனடி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சவுதி அரேபியா எச்சரிக்கை.
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களுக்கு அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு.
இராச்சியம் மற்றும் ஈராக்கில் உள்ள எர்பில் (Erbil) இலக்குகள் மீது ஈரான் உடனடி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சவுதி அரேபியாவின் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
ஈரானில் ஹிஜாப் அணியாததால் பொலிஸ் காவலில் இருந்த மஹ்சா அமினி என்ற பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, மிகப்பெரிய போராட்டம் ஈரானில் தொடங்கியது.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது தலைகளையோ முகத்தையோ மறைக்காமல் சாலைகளில் இறங்கி ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர், இது உலக நாடுகள் முழுவதும் கவனிக்கப்பட்டு ஈரான் அரசுக்கு எதிரான கண்டனம் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானில் நிலவும் போராட்டங்களில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக, இராச்சியம் மற்றும் ஈராக்கில் உள்ள எர்பில் ஆகிய இலக்குகள் மீது ஈரான் உடனடி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
மேலும் இது தொடர்பான உளவுத்துறை அறிக்கைகளை சவுதி அரேபியா அமெரிக்க அதிகாரிகளுடன் பகிர்ந்துள்ளது என Wall Street Journal அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.
சவுதி அரேபிய உளவுத்துறையின் இந்த எச்சரிக்கைக்கு பிறகு, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளின் ராணுவத்தினர் எச்சரிக்கை நிலைகளை உயர்த்தியுள்ளனர்.
இதற்கிடையில் Wall Street Journal செய்தி நிறுவனம் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, அமெரிக்கா தாக்குதல் குறித்து கவலை கொண்டுள்ளது மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சவுதி அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மலிவான தொழிலாளர்களாக கனடா எங்களை சுரண்டுகிறது: கொந்தளிக்கும் இந்திய மாணவர்கள்
ஆனால் சவுதி அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட உளவுத்துறை பற்றிய எந்த விவரங்களையும் அந்த அதிகாரி வழங்கவில்லை.
நாட்டில் தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.