ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தண்டனையை நிறுத்துவதற்காக தனியார் அமைப்பொன்று இந்திய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கேரளப்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (34). 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் அவருக்கு செவியர் வேலை கிடைத்தது.
செவிலியராக பணி செய்ததில் கிடைத்த வருவாய் போதுமானதாக இல்லாததால், சொந்தமாக கிளினிக் துவங்க முடிவு செய்துள்ளார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டில் சொந்தமாக தொழில் துவங்கவேண்டுமானால், உள்ளூர் கூட்டாளர் ஒருவர் தேவை.
அப்போது, நிமிஷாவுக்கு ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவர் உதவ முன்வந்துள்ளார்.
ஆனால், பின்னர் மஹ்தி, நிமிஷா தன் மனைவி என்பதற்கான போலியான ஆதாரங்களை உருவாக்கியதுடன், கிளினிக்கில் கிடைக்கும் பணத்தையும் எடுத்துக்கொள்ளத் துவங்கியுள்ளார்.
நிமிஷாவை அடித்துத் துன்புறுத்தியதுடன், அவரது பாஸ்போர்ட்டையும் மஹ்தி பறித்துவைத்துக்கொள்ள, எப்படியாவது தனது பாஸ்போர்ட்டை மீட்டு, தப்பி வந்துவிடவேண்டும் என திட்டமிட்ட நிமிஷா, மஹ்திக்கு மயக்க ஊசி போட்டிருக்கிறார்.
ஆனால், மயக்க மருந்தின் அளவு அதிகமாகவே, மஹ்தி உயிரிழந்துள்ளார். மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேர முயற்சி
நிமிஷாவின் தண்டனையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்காத நிலையில், அடுத்த புதன்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், நிமிஷா விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தைக் கோரி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 14ஆம் திகதி நிமிஷா தொடர்பான வழக்கை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், ஏமன் நாட்டில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால், அச்சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இரத்தப்பணம் என்னும் ஒரு தொகையை செலுத்தினால், அவர்கள் குற்றவாளியை மன்னிப்பதாக அறிவிப்பார்கள்.
அது தொடர்பாக ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும், இந்திய அரசை நிமிஷா குடும்பம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |