முதல் கொரோனா நோயாளி... சீன பெண்மணி: விசாரணையை தீவிரப்படுத்தும் விஞ்ஞானிகள் குழு
சீனாவில் கொரோனா தொற்றுக்கு முதன் முதலாக இலக்கான பெண் தொடர்பில் விஞ்ஞானிகள் குழு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பிரித்தானியா மற்றும் நோர்வே விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, வூகான் ஆய்கவத்திற்கும் 3 மைல்கள் தொலைவில் குடியிருந்த, கொரோனா நோய்க்கு முதலாவதாக இலக்கான 61 வயது பெண்மணி தொடர்பில் விஞ்ஞானிகளின் கவனம் திரும்பியுள்ளது.
2019 நவம்பர் மாதம் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் குறித்த பெண்மணி மருத்துவமனையை நாடியுள்ளார்.
ஆனால், சீனா தரப்பில் டிசம்பர் 8ம் திகதியே முதல் நோயாளியை அடையாளம் கண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்புக்கு தரவுகளை சமர்ப்பித்துள்ளது.
இதனிடையே, ஆய்வாளர்கள் குழு சீனாவின் முதல் நோயாளிகள் தொடர்பில் உறுதியான தரவுகளை சேகரித்துள்ளதுடன், அவர்களின் சிகிச்சை குறித்த தகவல்களையும் ஒப்பீடு செய்துள்ளனர்.
பிரித்தானியா உட்பட பல நாடுகளின் விஞ்ஞானிகள் குழு, உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து சீனாவை கட்டாயப்படுத்தி வருகிறது.
முதல் கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த 61 வயது பெண்மணி நாள் தோறும் சுரங்க ரயில் சேவையை பயன்படுத்துபவர் எனவும்,
அதனாலையே, வூகான் நகரில் குடியிருக்கும் 11 மில்லியன் மக்களின் பெரும்பாலானோர் பாதிப்புக்கு உள்ளாக நேர்ந்தது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மூன்று நோயாளிகளின் தரவுகள் தம்மிடம் இருப்பதாக வூகான் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில், நாளுக்கு நாள் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் குழு, கொரோனா தொற்றின் தோற்றம் தொடர்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சீனாவின் மெளனம் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.