110 வருட டெஸ்ட் வரலாற்றில் எந்த பந்துவீச்சாளரும் செய்யாத சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்
ஸ்காட் போலண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
AUS vs WI Test
மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
சபீனா பார்க்கில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 143 ஓட்டங்களில் சுருண்டது.
அதை தொடர்ந்து, 2வது இன்னிங்க்ஸை ஆடி வரும் அவுஸ்திரேலிய அணி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை எடுத்துள்ளது. இதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 181 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.
ஸ்காட் போலண்ட்
முதல் இன்னிங்ஸில், 34 ஓட்டங்களை கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்திய அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல், இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்காட் போலண்ட், 52 விக்கெட்களை கைப்பற்றியதோடு, 17.33 என்ற பந்து வீச்சு சராசரியை வைத்துள்ளார்.
1915 ஆம் ஆண்டுக்கு பின்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 க்கும் அதிகமான பந்துகளை வீசிய, எந்த ஒரு பந்துவீச்சாளரும், இப்படியான சராசரியை வைத்தது இல்லை.
1901 முதல் 1914 வரை விளையாடிய இங்கிலாந்து வீரர் சிட்னி பார்ன்ஸ், 27 போட்டிகளில் விளையாடி, 189 விக்கெட்கள் எடுத்து, 16.43 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார்.
1915 ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்த சராசரி வைத்திருந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில், 19.48 சராசரியுடன் பும்ரா 5வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |