ஆப்கான் மக்களுக்கு பிரான்ஸ் ஆதரவு! அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உறுதி
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வரும் மக்களுக்கு உதவ தயார் என பிரான்ஸ் நாட்டின் அரசு உறுதியளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது அரசியல் சூழல் மாறி உள்ளதை அடுத்து அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அடைக்கலம் தர வேண்டும் என்றும் அனைத்து நாடுகளின் அரசுகளை ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் இதுகுறித்து தனது உறுதிமொழியை கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்ட அறிக்கையில், "எமது நாட்டிற்காக வேலை செய்த ஆப்கான் மக்களை பிரான்ஸ் ஒருபோது கைவிடாது" என்று உறுதியளித்தார்.
மொழி பெயர்ப்பாளர்கள் முதற்கொண்டு, சமையலறை பணியாளர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றவர்களையும் பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.