காபூலில் சிக்கியவர்களின் துயரத்தை விலை பேசும் அமெரிக்க நிறுவனம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புவோர்களிடம் இருந்து தனியார் அமெரிக்க நிறுவனம் ஒன்று பெருந்தொகையை கட்டணமாக வசூலிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியுள்ள நிலையில், அப்பாவி ஆப்கன் மக்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அனைவரும் அந்த நாட்டில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ளனர்.
இதனிடையே, தாலிபான்கள் விதித்துள்ள காலக்கெடு ஆகத்து 31ம் திகதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், கனடா, பிரித்தானியா, நோர்வே உள்ளிட்ட நாடுகள் மீட்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.
இருப்பினும் கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் Blackwater என்ற ராணுவ கூலிப்படையினர் நிறுவனம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற பயணிகள் ஒருவருக்கு தலா 6,500 டொலர் கட்டணம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானின் வேறு பகுதியில் இருந்து காபூல் விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்துவர தனிக்கட்டணமும் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவுக்கு உதவிய அப்பாவி ஆப்கன் மக்கள், அமெரிக்காவால் தாங்களும் காப்பாற்றப்படுவோம் என நம்பி இருந்துள்ளனர்.
இருப்பினும், கடைசி நிமிடங்கள் வரையில் மீட்பு நடவடிக்கை தொடரும் என்றே அமெரிக்கா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான மீட்பு நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், எஞ்சியுள்ள நாட்கள் அமெரிக்க துருப்புகளின் தளவாடங்களை மீட்க நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.