இலங்கை அணியை துரத்தும் துரதிர்ஷ்டம்: மகளிர் உலகக்கிண்ணத்தில் மீண்டும் சோதனை
கொழும்பில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மகளிர் உலகக்கிண்ணப் போட்டி, மழையால் பாதியில் கைவிடப்பட்டதால் இலங்கை அணி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
வீராங்கனைகள் அபாரம்
மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் 15வது போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் குவித்தது.
நிலக்ஷி டி சில்வா 55 (28) ஓட்டங்களும், அணித்தலைவர் சமரி அதப்பத்து 53 (72) ஓட்டங்களும் விளாசினர். ஹாசினி பெரேரா 44 ஓட்டங்களும், விஷ்மி குணரத்னே 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் நியூசிலாந்து களமிறங்க இருந்தபோது மழைபெய்தது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மழையால் வந்த வினை
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இது இலங்கை அணிக்கு நடப்பு தொடரில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியும் மழையால் கைவிடப்பட்டதால் இலங்கை அணி ஒரு புள்ளி கிடைத்தது.
அத்துடன் இதுவரை 4 போட்டிகளில் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது. இருமுறை மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்ட அணியாக இலங்கை உள்ளது.
எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையுடன் வீராங்கனைகளை விளையாட வேண்டியிருக்கும்.
கொழும்பில் 17ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் இலங்கை அணி பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |