அப்போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் பரிதாபநிலை வந்திருக்காது! சீமான் ஆவேசம்
சென்னையில் தமிழக பொலிஸ் மீது வட மாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து நாம் தமிழர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் மீது தாக்குதல்
சென்னை அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வட மாநில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி, புகாரின் அடிப்படையில் அங்கு விசாரிக்க சென்றார்.
அங்கு அவர் மீது கற்களை வீசிய வடமாநில இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ரகுபதி காயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் 6 பேர் மீது வழக்குப்பதிவிட்டு கைது செய்தனர்.
சீமான் கண்டனம்
இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுத பூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்க சென்ற தமிழ்நாடு காவலர்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கடுமையாகத் தாக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியையும, கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இதேபோன்று வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழக காவல்துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டபோதே அதனை நான் கடுமையாக கண்டித்திருந்தேன்.
அப்போதே தமிழ்நாடு அரசு உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது அம்பத்தூரில் காவலர் ரகுபதி அவர்கள் வட மாநிலத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு ஆவடி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது.
தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தருவதோடு, அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டு வந்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |