மாணவியை காலில் விழ வைத்தவர்கள் மனநோயாளிகள்! நாம் தமிழர் சீமான் ஆவேசம்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி காலில் விழுந்ததால் ஏற்பட்ட சர்ச்சை
பாஜக தலைவர் அண்ணாமலையின் காலில் மாணவி விழுந்தது குறித்து சீமான் ஆவேசம்
பாஜக தலைவர் அண்ணாமலையின் காலில் மாணவி விழுந்தது குறித்து நாம் தமிழர் சீமான் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அங்கு நீட்டில் தேர்ச்சி பெற்றிருந்த மாணவி ஒருவர் மருத்துவ படிப்பு செலவுக்கு உதவி கேட்டார். அதற்கு முழு படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்தார்.
அப்போது அந்த மாணவி அண்ணாமலையின் காலில் விழுந்தார். இதுதொடர்பான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவின் இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, குறித்த மாணவிக்கு காலில் விழுமாறு சிக்னல் கொடுக்கிறார். அவர் கண்ணசைத்த பின்னர் மாணவி காலில் விழுந்தார் என பலர் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,
'காலில் விழக்கூறுவது ஒரு மனநோய். உளவியலான நிமிர்வு நமக்கு தேவைப்படுகிறது. சின்ன பிள்ளையை காலில் விழு என்று சுற்றி இருப்பார் சொல்லும்போது, தப்பாக போய்விடுமோ என நினைத்து அந்த மாணவி காலில் விழுந்துள்ளார்.
காலில் விழ சொன்னவருக்கும், விழ அனுமதித்தவருக்கும் தான் மனநோய். அந்த மாணவி தான் மருத்துவம் படித்து இந்த நோயை தீர்க்க வேண்டும்' என கண்டனம் தெரிவித்தார்.