உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை இந்திய அதிகாரிகள் இவ்வாறு அணுகுவது பேரவலம்! சீமான் கண்டனம்
உக்ரைனில் ஆபத்துமிகுந்த போர்ச்சூழலில் துயருற்று நிற்கும் தமிழக மாணவப்பிள்ளைகளை பாகுபாட்டோடு அணுகுவது ஏற்கவே முடியாத பேரவலம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அண்டை நாடுகள் மூலமாக மீட்கப்படும் வேளையில் தமிழகம் உள்ளிட்ட தென்னகப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
போலந்து நாட்டிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத்துவம் அளித்து, தமிழ்நாடு போன்ற தென்னாட்டுப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை நாட்கணக்கில் காக்க வைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்நாட்டு மாணவர்கள் ஒரு அசாதாரணச்சூழலில் சிக்கித் தவிக்கும் வேளையிலும், அவர்களைப் பாகுபாட்டோடு அணுகிப் புறக்கணிப்பதும், அம்மாணவர்களுக்கான சமவுரிமையை மறுப்பதும் வெட்கக்கேடானது.
அசாதாரணமானப் போர்ச்சூழலிலும் தமிழக மாணவர்கள் மீது இந்தியத் தூதரக அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதா?https://t.co/qOiDbqzYf3 pic.twitter.com/xKZbtpEp0w
— சீமான் (@SeemanOfficial) March 6, 2022
பாஜகவைச் சேர்ந்த பெருமக்கள், வடநாடு மட்டுமே இந்தியாவென கருதிச் செயல்படும் இத்தகையப் போக்கு எவ்வகையிலும் நியாயம் இல்லை.
இந்திய ஒன்றியத்துக்குள் வாழும் தமிழர்களைத்தான் மாற்றாந்தாய் மனப்போக்கோடு அணுகிறார்களென்றால், வெளிநாட்டில் ஆபத்துமிகுந்த போர்ச்சூழலில் துயருற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளையும் இவ்வாறு அணுகுவது ஏற்கவே முடியாத பேரவலமாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, தமிழக மாணவர்கள் மீது பாரபட்சமானப்போக்கைக் காட்டும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழக மாணவர்களை மீட்டுக் கொண்டுவர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.