ஏ.. அடங்க மாட்டிங்களா? சட்டையை மடித்துக்கொண்டு சண்டைக்கு இறங்கிய சீமான்!
திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிலரால் சலசலப்பு ஏற்பட்டபோது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபமடைந்து சண்டையிட சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் கட்சியினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம் கிராமத்தில், ராஜேந்திர சோழன் கோவில் விழாவை கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் ராஜேந்திர சோழன் கோவிலில் நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சோழர் பெருமை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் கொடியை சிலர் இறக்கியதாகவும், கட்சி வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனை மேடையில் இருந்து கவனித்த சீமான், அங்கே என்ன பிரச்சனை என்று கேட்டார். பின்னர், ஏ அடங்க மாட்டீங்களா? இங்க வர சொல்லு, யார் அவன் கொடியை இறக்குவது? என்று கேட்ட அவர், சட்டையை மடித்துக் கொண்டு சண்டைக்கு செல்வது போல் நகர்ந்தார். உடனே கட்சி நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தினர்.
முன்னதாக, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நாம் தமிழர் கட்சியினர் பறை இசைத்துள்ளனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் பேசிய சீமான், 'நான் பறை அடிப்பதில் உனக்கு பிரச்சனையா? பறை நம்முடைய இசை. அதை அடிப்பேன். நான் பறை தானே அடித்தேன். உன்னை அடிக்க வில்லையே. நான் கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தால் நீ இப்படி பண்ணி இருப்பியா? நான் தனிச்சு நிற்கிறேன் வா. இது உன் கோட்டை என்றால்.. தமிழ்நாடே என் கோட்டை' என ஆவேசமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.