கனடா, பிரான்ஸ் நாடுகளில் நாங்கள் அதிகாரிகள்..இங்கே அகதிகள்: கண்கலங்கிய சீமான்
இன்னும் ஈழத்தமிழர்களை அகதியாக பார்ப்பது வலியாக உள்ளது என, யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் குறித்து பேசும்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையுடன் குறிப்பிட்டார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது அவர் புலம்பெயரும் ஈழத்தமிழர்களை நினைத்து வேதனையடைந்தார்.
சீமான் வேதனை
மேலும் அவர் பேசும்போது, 'எங்களுடைய இனம் நீண்டகாலமாக தூக்கி சுமந்த வலி இதில் பதிவாகியிருக்கிறது. பொறுப்புணர்வுடன் எடுத்திருக்கிறார்கள். தம்பி விஜய்சேதுபதியின் பங்களிப்பு அசாத்தியமானது. இயக்குநர் அந்த காயத்தை உணர்ந்து படமாக எடுத்துள்ளார். பல இடங்களில் நான் கண்கலங்கி விட்டேன். ஏனெனில் அந்த வலியிலேயே வாழ்வதனால் படமாக அதனை கடந்து போக முடியாது. இது பெரிய பதிவு.
நிறைய காட்சிகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றன. அது நாங்கள் இன்னும் அனுபவித்து கொண்டிருப்பது தான். குடியுரிமை அற்றதனால், அகதிகளாக இருப்பதனால் ஒரு தலைமுறை தாண்டி இங்கு இருக்கிறோம். ஏறக்குறைய 30, 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. சட்டம் மீறி குடியேறியவர்கள் என்று கூறுகிறார்கள்.
திபெத்தியர்களுக்கு இந்த நாடு குடியுரிமை கொடுத்திருக்கிறது. ஆனால், இந்த நாட்டிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இங்கேயே 10 கோடி பேர் இருக்கிறோம். எங்கள் பிள்ளைகள் திறம்பட படித்தாலும் மேற்படிப்பு படிக்க முடியாது.
எல்லா விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினாலும் அதற்கு மேல் செல்ல முடியாது, சேரவும் முடியாது. கனடா, பிரான்ஸ் நாடுகளில் காவல்துறை, இராணுவம் என எல்லா துறைகளிலும் நாங்கள் இருக்கிறோம்.
எல்லா நாடுகளும் எங்களை அங்கீகரிக்கிறது. ஆனால் என் சொந்த நாடு, என் தந்தையர் நாடு இன்னும் எங்களை அகதியாக பார்ப்பது இன்னும் பெரிய வலி தோய்ந்தது' என உருக்கத்துடன் தெரிவித்தார்.