திமுக பெண் கவுன்சிலரை அதிமுக மாநாட்டிற்கு அழைத்த செல்லூர் ராஜு
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுக பெண் கவுன்சிலருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மாநாடு
ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டின் அழைப்பிதழை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வழிபட்டார்.
பின்பு, கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மேரிஸ் தேவாலயம் ஆகிய வழிபாட்டு தளங்களில் வைத்து வழிபாடு நடத்தினார்.
இதனையடுத்து, அதிமுக மாநாட்டின் அழைப்பிதழை மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விநியோகித்து வந்தார்.
திமுக பெண் கவுன்சிலருக்கு அழைப்பு
இதனையடுத்து அவர், மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அழைப்பிதழை கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, செல்லூர் ராஜூவை பார்த்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி திமுக கவுன்சிலர் லத்திகாஸ்ரீ மரியாதை நிமித்தமாக அவருக்கு வணக்கம் வைத்தார்.
பின்பு, திமுக பெண் கவுன்சிலருக்கு வெற்றிலை, பாக்கு , குங்குமம் வைத்து அழைப்பிதழைக் கொடுத்து அதிமுக மாநாட்டிற்கு வர வேண்டும் என்று செல்லூர் ராஜு அழைப்பு விடுத்தார்.
திமுக கவுன்சிலருக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுத்த சம்பவம் அப்பகுதி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |