இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்... இரக்கமின்றி வெளியேற்றும் நாடு
கால்பந்து உலகக்கிண்ணம் தொடருக்காக இரத்தமும் வியர்வையும் சிந்தி கட்டுமான பணிகளில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்களை கட்டார் நாடு வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.
உலகக்கிண்ணம் கால்பந்து கோலாகலங்களின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் எவரும் நாட்டில் இருக்க வேண்டாம் என அவர்களுக்கு 5 மாதங்கள் ஊதியமற்ற விடுப்பை வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே அவர்கள் ஊதியமற்ற விடுப்புக்கு தங்கள் நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கட்டார் நிர்வாகத்தின் இந்த கடும்போக்கு நடவடிக்கையால், அப்பாவி புலம்பெயர் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
மட்டுமின்றி கட்டாரில் வேலை செய்யும் உரிமையை வாங்குவதற்காக வாங்கிய அதிகமான கடனை எப்படி அடைப்பார்கள் என்ற அச்சம் பலரை கலங்கடித்துள்ளது.
இந்த நிலையில், Amnesty International அமைப்பு இந்த விவகாரம் தொடர்பில் கட்டார் மீது அழுத்தம் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதனிடையே, கட்டாரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்குமாறு செல்சி மகளிர் அணி கேப்டன் மக்டா எரிக்சன் சனிக்கிழமை தமது அணி வீரர்களை வலியுறுத்தினார்.
முன்னதாக, உலகக் கிண்ணம் தொடருக்காக பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், இது கட்டாரில் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கே அதிக அளவில் காணப்பட்டுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேபாளத்தில் டயாலிசிஸ் நோயாளிகளில் ஐந்தில் ஒரு பகுதியினர் வளைகுடாவில் இருந்து திரும்பிய தொழிலாளர்கள் என பரிசோதனைகளில் ஈடுபட்ட மருத்துவர்கள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.