இராணுவ வீரருக்காக விடுவிக்கப்பட்ட 4 கொடூர கைதிகள்... தாலிபான் அமைச்சரவையில் முக்கிய பதவி
ஆப்கானிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரருக்கு பதிலாக விடுவிக்கப்பட்ட நான்கு கைதிகளுக்கு தாலிபான்கள் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
தாலிபான்களின் நேசப்படைகளான ஹக்கானி குழுவினரால் 2009ல் சிறைப்பிடிக்கப்பட்டவர் அமெரிக்க ராணுவ வீரரான Bowe Bergdahl. இவர் 2014 வரையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஹக்கானி படைகளின் கட்டுப்பாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 2014ல் ஒபாமா நிர்வாகம் தாலிபான்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் Bowe Bergdahl விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்கு பதிலாக குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 தாலிபான் தீவிரவாதிகளில் நால்வரை விடுவிக்க ஒபாமா நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
தற்போது அவர்கள் நால்வருக்கும் தாலிபான்கள் அமைக்கவிருக்கும் ஆட்சியில் முக்கிய பதவிகளை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகமது நபி ஓமாரி, கைருல்லா கைர்க்வா, நோருல்லா நூரி, அப்துல் ஹக் வசிக் மற்றும் முகமது ஃபாஸ்ல் ஆகியோருக்கே தாலிபான்கள் முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் இறுதியில் தாலிபான்க:ள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் கோஸ்ட் மாகாண ஆளுநராக முகமது நபி ஓமாரியை நியமித்தார்கள். தற்போது, எல்லைகள் மற்றும் பழங்குடி விவகாரங்கள் இடைக்கால அமைச்சராக நோருல்லா நூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத்துறை இயக்குனராக அப்துல் ஹக் வசிக் நியமிக்கப்பட்டுள்ளார். துணை பாதுகாப்பு அமைச்சராக முகமது ஃபாஸ்ல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் அப்துல் ஹக் வசிக் முக்கிய பங்காற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி, தாலிபான்களின் புதிய அமைச்சரவையில் இடைக்கால உள்விவகார அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் சிராஜுதீன் ஹக்கானி தலைக்கு அமெரிக்க நிர்வாகம் 10 மில்லியன் டொலர் வெகுமதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.