தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
இந்திய மாநிலம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்து.
செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதை
செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று அமர்வுக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என நீதிபதி நிஷா பானு அறிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் போது நாங்கள் ஏன் நிலுவையில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்பு, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் முடிவு எடுக்கட்டும் என நீதிபதிகள் இந்த மனுவை முடித்து வைத்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். சுங்க அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்றால் முடியாது. சுங்க அதிகாரி சம்மந்தப்பட்ட நபரை பிடித்து காவல்துறையில்தான் ஒப்படைக்க முடியும். இது அமலாக்கத்துறைக்கும் பொருந்தும்" என்று வாதாடினார்.
அமலாக்கத்துறை தரப்பில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், செந்தில் பாலாஜி தரப்புக்கு நாளை வாதத்தை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |