செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கட்டும்! நீதிமன்றம் செக்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு அறிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கு
இந்திய மாநிலம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் அமர்வில் தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாகவும் சி.வி.கார்த்திகேயன் கூறினார்.
உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கட்டும்
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது.
இதனை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மனுவை விசாரித்தது. செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனர்.
அப்போது, செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பிலும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் வேறு நாளுக்கு ஒத்திவைக்கலாம் என செந்தில்பாலாஜி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னர், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என நீதிபதி நிஷா பானு அறிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் போது நாங்கள் ஏன் நிலுவையில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்பு, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் முடிவு எடுக்கட்டும் என நீதிபதிகள் இந்த மனுவை முடித்து வைத்தனர்.
இந்நிலையில்,செந்தில் பாலாஜியின் வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |