செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவு! அமலாக்கத்துறையின் அடுத்த நகர்வு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இருக்கும் இடம் குறித்து கண்டறிய அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்திய மாநிலம் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறினார்.
இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி சகோதரருக்கு சம்மன்
மேலும் இந்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறிய நிலையில், அசோக் குமார் இன்னும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அசோக் குமாருக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு மாதகாலமாக அசோக் குமார் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல், இந்த வழக்கில் 20 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும், 20 பேர் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |