471 நாட்கள் கழித்து ஜாமினில் வெளிவருகிறார் செந்தில் பாலாஜி! ஆனால் சில நிபந்தனைகள்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவருகிறார்.
கிடைத்தது ஜாமின்
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 2016 -ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இது தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜியின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வாசித்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த 471 நாட்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது ஜாமினில் வெளிவரவுள்ளார்.
இதற்கிடையில் அவர் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும்.
அதேபோல இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |