அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கு: மூன்றாவது நீதிபதி நியமனம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம் திகதி தமிழகத்தின் மின் துறை அமைச்சராக செயல்பட்டு வந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி எஸ் மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள்
இந்நிலையில் ஜூலை 4ம் திகதியான நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ஜெ.நிஷா பானு தன்னுடைய தீர்ப்பை முதலில் வாசித்தார்.
அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமான நடவடிக்கை, எனவே இந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறேன், அத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிடுகிறேன் என தீர்ப்பு வழங்கினார்.
Photo credit: Milei.vencel/wikimedia
ஆனால் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருந்து காணொலி வாயிலாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மற்றொரு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமான செயல் அல்ல, எனவே இது தொடர்பாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்தது அல்ல தீர்ப்பு வழங்கினார்.
மூன்றாவது நீதிபதி நியமனம்
இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கி இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மெரிட் முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |