என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் தலைவரே! வெளியில் வந்ததும் செந்தில் பாலாஜியின் பதிவு வைரல்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெளியில் வந்த செந்தில் பாலாஜி
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது.
பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், செப்டம்பர் 26 -ம் திகதி காலை செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள்.
முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என்று கூறியிருந்தார்.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், டெல்லி சென்ற முதலமைச்சர் சென்னை விமான நிலையம் வந்தவுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரை சந்தித்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |