அமேசானின் ஜெஃப் பெசோஸை முந்தி உலகின் நான்காவது பணக்காரரான நபர்... அவரது சொத்து மதிப்பு
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை கூகிள் இணை நிறுவனரான செர்ஜி பிரின் முந்தி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒரே நாளில் 2.4 பில்லியன் டொலர்
பிரின் சொத்து மதிப்பு 240 பில்லியன் அமெரிக்க டொலர் என அதிகரித்துள்ள நிலையில், பெசோஸ் சொத்து மதிப்பு 239.9 பில்லியன் டொலர் என்றே தெரிய வந்துள்ளது.

Alphabet நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், பிரின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2.4 பில்லியன் டொலர் அளவுக்கு பிரின் ஆதாயமடைந்துள்ளார்.
இதுவே, அவரை உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் நாலாமிடத்திற்கு முன்னேற வைத்துள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதி Alphabet நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் அதிகரித்து 317 டொலருக்கு வர்த்தகமானது.
மட்டுமின்றி, கடந்த 30 நாட்களில், Alphabet பங்குகள் கிட்டத்தட்ட 10 சதவீத லாபத்தை ஈட்டியுள்ளது. இது நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
Alphabet பங்குகளின் ஏற்றத்திற்கு காரணம் கூகிள் நிறுவனத்தின் ஜெமினி 3 செயற்கை நுண்ணறிவு மொடல் என்றே கூறுகின்றனர். மேலும், என்விடியாவின் GPU சிப்களை அதிகம் சார்ந்திருக்காமல் ஜெமினி உருவாக்கப்பட்டது என்பதையும் முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

பணக்காரர்கள் தரவரிசையில்
அமெரிக்க பாதுகாப்புத் துறை தனது ஜெனரேட்டிவ் ஏஐ மேம்பாட்டுத் திட்டத்திற்காக கூகிளின் ஜெமினி தளத்தைத் தெரிவு செய்ததைத் தொடர்ந்து, ஆல்பாபெட் நிறுவனத்திற்கு மேலும் ஒரு ஊக்கம் கிடைத்துள்ளது.
ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், அதே நாளில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 0.5 சதவீதத்திற்கும் குறைவான ஒரு சிறிய லாபத்தையே ஈட்டின.

இந்த ஒப்பீட்டளவில் சுமாரான செயல்பாடு, ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மற்றொரு இடத்தைப் பறிபோகச் செய்வதற்கு வழிவகுத்தது.
ஆனால், சமீபத்திய மாதங்களில் கூகிள் நிறுவனர்களில் ஒருவரால் பெசோஸ் முந்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மாதம், லாரி பேஜ் முந்திச் சென்று, பெசோஸை முதல் மூன்று இடங்களிலிருந்து வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |